Last Updated : 05 Jul, 2025 10:02 AM

5  

Published : 05 Jul 2025 10:02 AM
Last Updated : 05 Jul 2025 10:02 AM

எங்களுக்குத் தெரியாம நடந்துருச்சு... இருந்தாலும் தப்புத்தான்! - ஆபாச நடன சர்ச்சையில் ஆற்காடு நகர அதிமுக

என்னதான் காசு கொடுத்து கூட்டம் கூட்டினாலும் வந்த கூட்டத்தை தக்கவைக்க குத்துப் பாட்டுக்கு நடனமாட வைப்பது இப்போது பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஃபேஷனாகி விட்டது. கூட்டத்தை தக்கவைக்கத்தான் அப்படி என்றால் சொந்தக் கட்சியினரை குஷிப்படுத்தவும் ஆபாச நடனம் ஆடவைத்து வலைதளங்களில் வறுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆற்காடு அதிமுக-வினர்.

​ராணிப்​பேட்டை மாவட்​டம் ஆற்​காட்​டில் மாற்​றுக் கட்​சி​யினர் அதி​முக-​வில் இணை​யும் நிகழ்ச்​சிக்கு அண்​மை​யில் ஏற்​பாடு செய்​திருந்​தார்​கள். ராணிப்​பேட்டை மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.எம்​.சுகு​மார் தலை​மை​யில் நடை​பெற்ற இந்த நிகழ்ச்​சிக்​கான ஏற்​பாடு​களை ஆற்​காடு நகரச் செய​லா​ளர் ஜிம் எம்​.சங்​கர் தடபுடலாகச் செய்​திருந்​தார். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்​கியது. இந்த நிகழ்ச்​சி​யில் முன்​னாள் அமைச்​சர்​கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்​சந்​திரன் ஆகி​யோர் சிறப்பு அழைப்​பாளர்​களாக கலந்​து​கொண்​டனர்.

முன்​னாள் அமைச்​சர்​கள் அங்கு வரு​வதற்கு முன்​ன​தாக அரங்​கத்​தில் கூடிய அதி​முக-​வினருக்கு அலுப்​புத் தட்​டா​மல் இருப்​ப​தற்​காக பெங்​களூரு​வைச் சேர்ந்த கலைக் குழு​வினரின் ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​திருந்​தார்​கள். இந்​தக் குழு​வினர் ஆரம்​பத்​தில் எம்​ஜிஆர், ஜெயலலிதா நடித்த சினிமா பாடல்​களுக்கு நடனம் ஆடினர். ஆனால், நேரம் ஆக ஆக ஆட்​டத்​தின் போக்கு டிராக் மாறியது. எம்​ஜிஆரின் தத்​து​வப் பாடல்​களும், கொள்​கைப்​பாடல்​களும் காணா​மல் போய் லேட்​டஸ்ட் குத்​துப் பாடல்​களை ஒலிக்​க​விட்டு அதற்​கேற்ப ஆபாச அசைவு​களை வெளிப்​படுத்​தத் தொடங்​கினர்.

இதைப் பார்த்​து​விட்டு மூத்த அதி​முக நிர்​வாகி​கள் சிலர் தலை​யில் அடித்​துக் கொண்டு அங்​கிருந்து நகர்ந்​தனர். முன்​னாள் அமைச்​சர்​களும் இதைப் பார்த்து முகம் சுளித்​த​படியே அரங்​கிற்​குள் வந்​தனர். உடனே சுதா​ரித்​துக் கொண்ட நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள், அவசர அவசர​மாக ஆடல் பாடல் நிகழ்ச்​சியை நிறுத்தி கலைக் குழு​வினரை அங்​கிருந்து பேக் அப் செய்​தனர்.

ஆனால், அதற்​குள்​ளாக இந்த ஆபாச நடனக் கூத்​துகளை வீடியோ எடுத்​தவர்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாக்​கி​விட்​டனர். இது அதி​முக தலைமை வரைக்​கும் எட்​டியதை அடுத்து நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​ட​தாகச் சொல்​கி​றார்​கள்.

சொந்​தக் கட்​சிக்​காரர்​களை இழுத்து உட்​கார​வைக்​க​வும் ஆபாச நடனத்​துக்கு ஏற்​பாடு செய்ய வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கிறதா அதி​முக என ராணிப்​பேட்டை மேற்கு மாவட்ட அதி​முக செய​லா​ளர் எஸ்​.எம்​.சுகு​மாரிடம் கேட்​டதற்​கு, “அப்​படி எல்​லாம் இல்​லீங்​க... கலைநிகழ்ச்சி ஏற்​பாடு செய்​யும் போதே எம்​ஜிஆர், ஜெயலலிதா பாடல்​களை மட்​டுமே ஒலிபரப்​பணும்னு கட்​டாயமா சொல்லி இருந்​தோம். ஆனால், யாரும் எதிர்​பா​ராத வித​மாக எங்​களுக்கே தெரி​யாமல் ஒரு தவறு நடந்து விட்​டது. உடனே சுதா​ரித்து ஆபாச நடனத்தை நிறுத்​தி​விட்​டோம். ஆனாலும், இதை சிலர் வேண்​டுமென்றே வீடியோ எடுத்து பெரி​தாக்​கி​விட்​டனர். இனி இப்​படி நடக்​காது’’ என்​றார்.

ஆற்​காடு நகர அதி​முக செய​லா​ளர் ஜிம் எம்​.சங்​கரோ, “முன்​னாள் அமைச்​சர்​கள் வரும் வரை கட்​சி​யினருக்கு போரடிக்​காமல் இருக்க கலை நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​திருந்​தோம். அவர்​களும் ஆரம்​பத்​தில் எம்​ஜிஆர், ஜெயலலிதா பாடல்​களுக்கு தான் நடனம் ஆடினர். வெறும் 20 செகண்ட் மட்​டுமே குத்து பாடலுக்கு ஆபாச நடனம் ஆடிட்​டாங்க. இருந்​தா​லும் இது தவறு என்​பதை நாங்​கள் ஒப்​புக்​கொள்​கி​றோம்.

ஆனால், திமுக நிகழ்ச்​சிகளில் ஒரு நாள் முழுக்க இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்​சிகள் பொது​மக்​கள் முன்​னிலை​யில் நடத்​தப்​படு​கிறது. அதையெல்​லாம் பெரி​தாக யாரும் பேசுவ​தில்​லை. அதி​முக நிகழ்ச்​சி​யில் வெறும் 20 செகண்ட் மட்​டுமே ஆடப்​பட்ட இந்த நடனத்தை சிலர் பெரி​தாக்​கி​விட்​டனர். இது எங்​களுக்​குத் தெரி​யாமல் நடந்​திருந்​தா​லும் தவறு தான் என்​ப​தால் தலை​மைக்கு இதுகுறித்து விளக்​கம் அளித்​திருக்​கி​றோம். இதற்கு மேல் இதை பெரி​தாக்க வேண்​டாம் என நினைக்​கிறோம்’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x