Published : 10 Aug 2014 11:00 AM
Last Updated : 10 Aug 2014 11:00 AM

மைக்கில் மின்சாரம் தாக்கி பாடகர் பலி: கோயில் நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

கோயில் திருவிழாவில் நடந்த கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த போது மைக் ஷாக் அடித்து பாடகர் பலியானார்.

ஆலந்தூரை அடுத்த மடுவின் கரை பெரிய பாளையத்தம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடித் திருவிழா தொடங்கியது. அன்றைய தினம் இரவு கோயில் வளாகத்தில் ராம் ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கச்சேரிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி தொடங்கியது. கச்சேரிக்கு முன்னதாக மழை பெய்திருந்ததால் மேடையும் மின்சார ஒயர்களும் ஈரமாக இருந்துள்ளன. அத்துடன் மின்சாரமும் வந்து போய்க் கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ரகுகுமார் திடீரென்று அலறியவாறு மேடையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ரகுகுமார் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். மேடையில் விளக்குகளுக்காக இணைக்கப்பட்டிருந்த ஒயரில் இருந்து ரகு குமார் பிடித்தி ருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மயங்கிக்கிடந்த ரகுகுமாரை டாக்டர் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

கோயில் நிர்வாகம் மீது வழக்கு:

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த புனிததோமையார் மலை போலீஸார், ரகுகுமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோத னைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரிய பாளையத் தம்மன் கோயில் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் உரிய அனுமதி இல்லாமலும், முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யாமலும் இன்னிசை கச்சேரி நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

காதல் திருமணம்

உயிரிழந்த ரகுகுமார் பற்றி அவரது உறவினர் சீனு கூறும்போது, “ரகுகுமார் பாடகியாக இருந்த புவனேஸ்வரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கொருக்குப் பேட்டை மணலி சாலையில் வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். 10-ம் வகுப்புவரை படித்த ரகு குமாருக்கு சினிமாவில் பெரிய பாடகராக வரவேண்டும் என்பது ஆசை. இதற்காகவே அவர் கச் சேரிகளில் பாடிக்கொண்டி ருந்தார்” என்றார்.

கடைசியாக பாடிய பாடல்

ரகு குமார் பற்றி ராம் ரிதம்ஸ் உரிமையாளரில் ஒருவரான ராம் கூறும்போது, “நானும் ரகுகுமாரும் பல ஆண்டுகளாக நண்பர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் ராம் ரிதம்ஸ் இசைக்குழுவை தொடங்கினோம். ரகு குமார் எல்லா பாடகர்களின் குரலிலும் பாடுவார். கிடார் வாசிப்பார். பெரிய பாளையத்தம்மன் கோயில் கச்சேரியில் “என்னம்மா கண்ணு சவுக்கியமா” என்ற பாடலை பாடி முடித்ததும் ரகு குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x