Published : 05 Jul 2025 01:40 AM
Last Updated : 05 Jul 2025 01:40 AM
சென்னை: திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுவதாக விசிக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், காங்கிரஸ் குறித்த விசிக நிர்வாகியின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறினாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மூலம் திமுக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பிறகு , "2011-ம் ஆண்டு போல் விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும்" என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
செல்வப்பெருந்தகையின் கருத்தை கடுமையாக விமர்சித்து தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குகின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையாகவா இருக்கிறது. எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கூறுகிறோம். நான் கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை.
அதேநேரம், காங்கிரஸின் வலிமை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தினால் உண்மை தெரியவரும். தமிழகத்தில் காங்கிரஸுக்கு என்ன இருக்கிறது? அகில இந்திய அளவில் ராகுல்காந்தி என்னும் தலைவர் சிறப்பாக செயல்படுகிறார். அதன் தொடர்ச்சியாகவே காங்கிரஸை பார்க்க வேண்டியிருக்கிறது. விசிகவுக்கு செல்வப்பெருந்தகை தலைவர் இல்லை. இன்று அவர் ஒரு கட்சியில் இருப்பார், நாளை ஒரு கட்சிக்கு செல்வார். இதுதான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்மீக உரிமை இல்லை. பாஜக, பாமகவோடு சேர மாட்டோம் என விசிக தலைவர் தெளிவாக கூறிய நிலையில், பாமகவோடு சேருங்கள் என சொல்வது அவர் வேலையல்ல. பாஜகவும், காங்கிரஸும் சேர வேண்டும் என நாங்கள் சொன்னால் அவர் ஏற்றுக் கொள்வாரா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸார் சமூக வலைதள பதிவுகளில், "2014 மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 4.37. அதேநேரத்தில் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் விசிகவின் வாக்கு சதவீதம் 0.77. யார் வலிமை என்று இப்போது புரிகிறதா. வன்னியரசின் இந்த பேச்சை முதலிலேயே கட்சித் தலைவர் தடுத்து நிறுத்த வேண்டும்" என கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
விசிகவில் இருந்து கருத்து வேறுபாட்டால் வெளியேறிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தலைவரான பிறகே திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "2024 மக்களவைத் தேர்தலில் திருமாவளவனை வெற்றி பெறச் செய்ய காங்கிரஸ் தொண்டர்கள உழைப்பார்கள்" என தெரிவித்திருந்தார். ஏற்கெனவே கட்சியில் இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக செல்வப்பெருந்தகை வந்ததில் எவ்வித சங்கடமும் இல்லை என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இரு தரப்பினரும் இணக்கமாகி ஓராண்டே ஆன நிலையில், தற்போது வெடித்துள்ள மோதல் எங்கு வரை செல்லும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT