Published : 05 Jul 2025 01:12 AM
Last Updated : 05 Jul 2025 01:12 AM
சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் அவருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற விருது வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, நல்லகண்ணு, கி.வீரமணி, குமரி அனந்தன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குரிய மூத்த அரசியல் தலைவரும், ‘மணிச்சுடர்’ இதழின் ஆசிரியரும், சமூக நல்லிணக்கத்துக்காக வாழ்நாளெல்லாம் உழைத்து வருபவருமான கே.எம்.காதர் மொய்தீனுக்கு விருதை வழங்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். கட்சியின் தமிழ் மாநில தலைவர், தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்தவர். அறிவார்ந்த சொற்பொழிவாளர், மனிதநேயம், மதநல்லிணக்கத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். கோவையில் கடந்த 2010-ல் நடந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழகத்துக்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வு கட்டுரை வழங்கியவர். ‘தாருல் குர்ஆன்’ இதழில்'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?' எனும் தலைப்பில் 8 ஆண்டுகள் தொடர் கட்டுரை எழுதியவர். ‘வாழும் நெறி’, ‘குர்ஆனின் குரல்’, ‘இசுலாமிய இறைக் கோட்பாடு’ என்பது உட்பட 6 நூல்களை எழுதியவர்.
வரலாற்று துறை பேராசிரியர்: திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றியவர். காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர். பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களது வாழ்வை உயர்த்திய ஆசானும் ஆவார்.
‘தகைசால் தமிழர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவிக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT