Published : 05 Jul 2025 12:37 AM
Last Updated : 05 Jul 2025 12:37 AM

பொன்முடியின் வெறுப்பு பேச்சு குறித்து விசாரிக்க தயங்கினால் சிபிஐக்கு மாற்ற நேரிடும்: போலீஸாருக்கு கோர்ட் எச்சரிக்கை

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக போலீஸார் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பெண்கள் குறித்தும், சைவம் - வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார். இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்க பதிவுத் துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘பொன்முடிக்கு எதிராக 3 காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அவர் பேசியது, வெறுப்பு பேச்சு என்ற வரம்புக்குள் வராததால், புகார்கள் முடித்துவைக்கப்பட்டன. பிறகு, பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்மீதான புலன் விசா ரணை நிலுவையில் உள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘எவ்வளவோ நல்ல விஷயம் இருக்கும்போது, ஏன் இதுபோல பேச வேண்டும். பொன்முடிக்கு எதிரான புகார் மீது போலீஸார் புலன் விசாரணை செய்ய தயங்கினால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும்’’ என எச்சரித்து வழக்கை ஜூலை 8-க்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x