“அதிமுகவுடன் இணைந்தே பாஜக இனி போராட்டங்களை நடத்தும்” - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ”அதிமுகவுடன் ஒன்றிணைந்தே இனி போராட்டங்களை நடத்துவோம், பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பாஜகவும் பங்கேற்கும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை முகப்பேரில் தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. தலைமைச் செயலகத்தில் யாரோ ஒருவர் கொடுத்த உத்தரவின் பேரில் திருப்புவனத்தில் அஜித்குமாரை காவல் துறையினர் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா, தலைமைச் செயலகத்தில் யாருக்கு போன் செய்தார்? அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் இருப்பவர் யாருக்குப் போன் செய்தார்? இவையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் முதல்வர் பதில் கூறாமல், சுலபமாக ‘சாரி’ சொல்லிவிட்டு கடந்து செல்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 24 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளன. இதனை லாக்-அப் மரணங்கள் என்று சொல்வதை விட, போலீஸாரால் செய்யப்படும் படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். இவை அனைத்துக்கும் முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் 7-ம் தேதி நான் கலந்து கொள்கிறேன். பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து இடங்களிலும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அதேபோல், தமிழகத்தில் இனி நடக்கும் அனைத்து போராட்டங்களிலும் பாஜக - அதிமுக ஒன்றிணைந்தே செயல்படும்.

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் லாக்-அப் மரணத்துக்கு தீர்வு காணப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. நான் மிகவும் விரும்ப கூடிய முதல்வர், தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஒரு முதல்வராக தமிழகத்துக்குச் செய்ய வேண்டியதை அவர் செய்யவில்லை” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in