Published : 04 Jul 2025 01:27 PM
Last Updated : 04 Jul 2025 01:27 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் முதல்முறையாக வந்திருக்கிறது. இதனால் பயணிகளின் வருகைக்காக கடல் வழிப் பாதை திறக்கப்பட்டுள்ளது. இனி வாரம் தோறும் கப்பல் வரும் என சுற்றுலாத்துறை செயலர் தெரிவித்தார். கப்பல் வருகையை எதிர்த்து ஆளும் அரசின் கூட்டணிக்கட்சியான அதிமுக மறியல் போராட்டம் நடத்தியது.
புதுச்சேரியில் கடந்த திமுக - காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த சுற்றுலா சொகுசு கப்பல் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சொகுசு கப்பலில் சூதாட்டம் நடைபெறும் என்பதால் நம் மாநில கலாச்சாரம் சீரழியும் என கடுமையாக எதிர்த்தன. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
அதையடுத்து கடந்த 2022-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை - விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே இயங்கும், தனியார் சொகுசு கப்பலை தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கும் வந்து புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்கவும் திட்டமிட்டனர். புதுச்சேரியிலிருந்து சென்னைக்கும் இக்கப்பல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தற்போதைய ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியான அதிமுக உட்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கப்பலில் கேசினோ சூதாட்டங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது என்று அப்போதைய ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இரண்டு முறை புதுச்சேரிக்கு வந்தும் பயணிகள் யாரும் இறக்கப்படாமல் சென்றது.
இப்போது மீண்டும் இந்த சொகுசு கப்பல் பயணம் இன்று முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி உப்பளம் துறைமுகம் அருகே கப்பல் வந்தது. புதுச்சேரியை சுற்றி பார்க்க வந்த பயணிகளை வரவேற்ற சுற்றுலாத்துறை செயலர் மணிகண்டன் கூறுகையில், “விசாகப்பட்டினத்திலிருந்து புதுச்சேரிக்கு 1200 பயணிகளுடன் வந்தது. புதுச்சேரி கலாச்சாரம் அறிய பயணிகளை கப்பலில் இருந்து வந்து சுற்றி பார்த்து செல்வார்கள். சுற்றுலாத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
பயணிகள் இன்று மாலை சுற்றிபார்த்து திரும்புகின்றனர். அடுத்தடுத்த வருகையின் போது தேவையான வசதிகளை செய்துதருவோம். ஒயிட் டவுன், மணக்குளவிநாயகர், ஆரோவில் ஆகிய இடங்களை சுற்றி பார்க்கின்றனர். கூடுதல் இடங்களை பார்க்கவும் ஏற்பாடு செய்வோம்.
தவறான விஷயங்களை அரசு அனுமதிக்காது. கலாச்சாரத்துக்கு எதிரான நிகழ்வோ, மீனவர்களுக்கு எதிரானதையோ அரசு அனுமதிக்காது. இது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அங்கம். தமிழகத்திலும் இக்கப்பல் சென்று கொண்டிருக்கிறது.
போதை பிரச்சினையோ, கலாச்சார சீரழிவோ ஏற்படவில்லை. சுற்றுலா பயணிகளை கண்காணிப்பதுடன் தேவையான உதவிகளை செய்கிறோம். சுற்றுலாத்துறை- மீனவர்துறை இணைந்துதான் செயல்படுகிறோம். கப்பல் வரும்போது மீனவர்கள் படகுகளில் அவ்வழியே செல்லாமல் பார்த்துகொள்கிறோம்.
மீனவர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுகிறோம். குறைபாடுகளை திருத்திக்கொள்வோம். வாரம் ஒருமுறை கப்பல் வெள்ளிக்கிழமை வரும். மீனவர்களுக்கு கப்பல் வரும்போது பாதிப்பு வராது. வருவாய் வரும்.” என்றார்.
புதுச்சேரியில் முதல் முறையாக கடல்வழி பாதை திறக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
210.8 மீட்டர் நீளம் கொண்ட, க்ரூஸ் பிராண்டான கோர்டெலியா க்ரூஸால் இயக்கப்படும் இக்கப்பல் புதுச்சேரிக்கு காலை வந்தது. புதுச்சேரி கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் 1,231 பயணிகள் மற்றும் 574 பணியாளர்களுடன் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக நங்கூரமிட்டது. காலை 10 மணியளவில் பயணிகள் படகுகளில் புதுச்சேரி கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பயணக் கப்பலின் வருகை, துறைமுகத் துறைக்கு, கப்பல் நிறுத்தும் படகுகளுக்கான கடற்கரை கட்டணம், கிடங்கு கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் மூலம் நேரடி வருவாயைப் பெற உதவும் என்றும் அரசு தரப்பில் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் இக்கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநில செயலர் அன்பழகன் தலைமையில் போராட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT