

சென்னை: திருவொற்றியூரில் உள்ள தாங்கல், பீர் பயில்வான் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நவ்பில் (17). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் பகுதியில் மழை பெய்தது. அப்போது, மாணவன் நவ்பில் டியூஷன் முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டுக்கு வெளியே சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் சேதமடைந்த மின்சார ஒயர் பட்டு மின்கசிவு ஏற்பட்டிருந்தது. அங்கு மாணவன் காலை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் மாணவன் நவ்பில் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீஸார் விரைந்து சென்று மாணவன் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் இறப்பை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு, மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாகத்தான் மாணவன் உயிரிழந்ததாகக் கூறி தாங்கல் - திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. போலீஸார் சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை திருவொற்றியூர் பொதுமக்கள் திரண்டு மாணவன் இறப்புக்கு நீதி கேட்டும், மின்வாரியத்தை கண்டித்தும் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மின் ஒயர் சேதம் தொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பே மின்வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் மீண்டும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்யும்வரை மாணவனின் உடலை வாங்கமாட்டோம் என மாணவனின் உறவினர்கள் ஏராளமானோர் தாங்கல், பீர் பயில்வான் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகளின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தலைவர்கள் கண்டனம்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தப் பகுதியில் ஏற்கெனவே 2 பேர் மின்சாரம் பாய்ந்து காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் திமுக அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஓர் அப்பாவி சிறுவன் இறந்துள்ளார். மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ.20 லட்சம் இழப்பீட்டு தொகை அறிவிக்க வேண்டும்” என்றார்.
முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “சிங்காரச் சென்னை என்று சொன்னவர்கள் பாதுகாப்பற்ற சென்னையை தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.