Published : 04 Jul 2025 01:49 AM
Last Updated : 04 Jul 2025 01:49 AM
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடியில் அமைக்கப்பட்ட 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடியில் அமைக்கப்பட்ட 50 ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நகர்ப்புறங்களில் மக்கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ.177 கோடியில் புதிதாக அமைக்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு 110-வது விதியின்கீழ் அறிவித்தார்.
முதல்கட்டமாக, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் தலா ரூ.25 லட்சம் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டு கடந்த 2023 ஜூன் 6-ம் தேதி திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. இந்நிலையில் 2-ம் கட்டமாக, தலா ரூ.25 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை நேரில் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார். இந்த மையங்களில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவி பணியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.60 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 50 ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT