Published : 04 Jul 2025 01:38 AM
Last Updated : 04 Jul 2025 01:38 AM
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ கட்சி உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்புக்காக, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்தார். இதேபோல், தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பொதுமக்களைச் சந்தித்து அரசின் திட்டங்களை விளக்கியதுடன், உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு 2026-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் திமுக 7-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இதற்காக பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது.
இதற்காக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை, ஜூன்மாதம் மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜூலை 1-ம் தேதி ‘ஓரணியில் தமிழ்நாடு’ செயல்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்பின், 2-ம் தேதி தமிழகத்தில் திமுக கட்சிரீதியாக உள்ள 76 மவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து, நேற்று வீடுவீடாகச் சென்று ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தில் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்வு தொடங்கியது. இந்த சந்திப்பின் மூலம் வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் பேரை கட்சியில் சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, 6 கேள்விகள் அடங்கிய படிவத்தை பொதுமக்களிடம் அளித்து, அதற்கு பொதுமக்கள் அளிக்கும் பதிலை நேரில் கேட்டறிந்தார்.
குறிப்பாக ‘எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழகத்தின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?’ என பொதுமக்களிடம் முதல்வர் கேட்டு அதற்கான பதிலைப் பெற்றார். இதுபோன்று அடுத்தடுத்த கேள்விகளுக்கும் மக்களிடம் இருந்து பதிலை பெற்று கள நிலவரத்தை அறிந்து கொண்டார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, சாதி மதம் அரசியல் கடந்து ஓரணியில் தமிழகம் வெல்லட்டும். இதற்காக அடுத்த 45 நாட்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு தமிழகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை முதல்வர் சந்தித்தபோது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல், தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்எல்ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தங்கள் பகுதியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களிடம் வீடுவீடாகச் சென்று படிவத்தை அளித்து அதில் உள்ள கேள்விகளுக்கு பதிலைப் பெற்று, உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT