Published : 04 Jul 2025 01:12 AM
Last Updated : 04 Jul 2025 01:12 AM
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், திமுகவினர் தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்ததாக ஆடியோ வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் பெல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வானந்தம் (27). மக்காச்சோள வியாபாரி. குண்டடம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இவரது மனைவி முத்துபிரியா (27) நவநாரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் மக்காச்சோளம் வாங்கி விற்று வந்துள்ளார் செல்வானந்தம். கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும், இவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில், செல்வானந்தம் புதன்கிழமையன்று விஷ மாத்திரைகளை விழுங்கிவிட்டார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், “மக்காச்சோளம் வாங்கிய வகையில் எனக்கும், அந்நிறுவனத்துக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் இருந்தது. அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக பணத்தைக் கேட்டு திமுக பிரமுகர்கள் 3 பேர் என்னை மிரட்டினர். வட்டிக்கு வாங்கி ரூ.10 லட்சம் கொடுத்தேன். மீண்டும் ரூ.5 லட்சம் கொடுத்தேன். அதற்குப் பிறகும் அவர்கள் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து அசிங்கப்படுத்துகிறார்கள். மன உளைச்சலால் உயிரை விடும் நிலைக்கு வந்துவிட்டேன். என் மரணத்துக்குப் பின்னர், என் குடும்பத்தினரை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று அழுதவாறு தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் போராட்டம்: இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், செல்வானந்தம் உடலை வாங்க மறுத்தும் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன் அவரது உறவினர்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT