Published : 04 Jul 2025 01:03 AM
Last Updated : 04 Jul 2025 01:03 AM
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் நேற்று பலரும் புகார் அளித்தனர்.
கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா, மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர். திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிகிறார். நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள், தாயார் சிவகாமி அம்மாள், சகோதரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதேவி, உறவினர் பகத்சிங் ஆகியோர் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாக ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2010-ல் நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள் துணை ஆட்சியராகப் பணியாற்றியபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக, நிகிதா குடும்பத்தினர் மீது வழக்கு உள்ளது. மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த செல்வத்திடம் ரூ.25 லட்சம், ஆலம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கொடி, முருகேசன் ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மொக்கமாயன், மணிமேகலை ஆகியோரிடமும் பணம் பெற்று, நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆலம்பட்டியில் உள்ள ஜெயபெருமாளுக்கு சொந்தமான வீட்டை தனியார் கல்லூரிமேலாளர் பாசில் மன்சிங் என்பவரிடம் விற்றதிலும் புகார் உள்ளது. நிகிதா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பாசில் மன்சிங், முத்துக்கொடி, முருகேசன், தெய்வம், வினோத்குமார் உள்ளிட்டோர் திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் நேற்று மீண்டும் புகார் மனு அளித்தனர்.
கல்லூரிக்கு வரவில்லை.. திண்டுக்கல்லில் உள்ள எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராக பணிபுரிந்து வரும் நிகிதா, மாணவிகள், உடன் பணிபுரியும் பேராசிரியைகள், அலுவலர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து இடையூறு தரும் வகையில், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தாவரவியல் துறை துணைத் தலைவராக இருந்தபோது கல்லூரி மாணவிகள் சிலர், ‘எங்களை மனரீதியாகத் துன்புறுத்துகிறார். தகாத வார்த்தைகளால் பேசுகிறார், எனவே, நிகிதாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்’ என 2024 மே மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த பூங்கொடியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால், அந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அஜித்குமார் மரணத்துக்கு பிறகு கடந்த 5 நாட்களாக நிகிதா பணிக்குவரவில்லை என்று கல்லூரி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT