Published : 04 Jul 2025 12:59 AM
Last Updated : 04 Jul 2025 12:59 AM
சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமார் (29), நகை திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸாரால் விசாரிக்கப்பட்டபோது உயிரிழந்தார். கோயில் பின்புறமுள்ள மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் கடுமையாக தாக்குவதை கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கழிவறையில் மறைந்திருந்து வீடியோ எடுத்தார். இதனால் அவர் இவ்வழக்கில் நேரடி சாட்சியாக உள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு இ-மெயிலில் டிஜிபிக்கு சக்தீஸ்வரன் கடிதம் அனுப்பினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான்தான் அஜித்குமாரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்ததாக, கைதாகியுள்ள தலைமைக் காவலர் ராஜாவுடன் தொடர்பில் உள்ளவர்கள் தவறான தகவலைப் பரப்புகின்றனர். நான் துணிந்துதான் சாட்சி சொல்ல முடிவெடுத்தேன். எனக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மற்றவர்கள் சாட்சி சொல்ல பயப்படுகின்றனர். எனது உயிர் போனால்கூட பரவாயில்லை. மற்ற சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மட்டுமே நான் சொன்னேன். அரசையோ, மற்றவர்களையோ குறை கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: போலீஸார் தாக்கி அஜித்குமார் இறந்த வழக்கில், ஜூன் 1-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சாட்சி அளித்துள்ளேன். அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் ராஜா என்பவர், பல்வேறு குற்றப் பின்னணி உடைய ரவுடிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஜூன் 28-ம் தேதி காலையில் தனிப்படை போலீஸார் விசாரணையின்போது நான் காவலர் ராஜாவை நேரில் சந்தித்தேன். அப்போதே என்னை கடுமையாக மிரட்டினார். எனக்கும், என்னைச் சார்ந்தோருக்கும் அச்சுறுத்தல் உள்ளது.
எனவே, எனக்கும், மற்றவர்களுக்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுவும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கடித நகலை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பதிவாளருக்கும், தென் மண்டல ஐ.ஜி.க்கும் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, தென்மண்டல ஐ.ஜி. பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், சக்தீஸ்குமாருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், அவரது வீடு, அலுவலகத்திலும் தலா 2 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT