கோயில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரம்: திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி 2-வது நாளாக விசாரணை

திருப்புவனம் ஆய்வு மாளிகையில் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷிடம் வாக்குமூலம் அளிக்கவந்த அஜித்குமாரின் தாய் மாலதி.
திருப்புவனம் ஆய்வு மாளிகையில் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷிடம் வாக்குமூலம் அளிக்கவந்த அஜித்குமாரின் தாய் மாலதி.
Updated on
1 min read

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கி கொலை செய்தது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பான விசாரணையின்போது தனிப்படை போலீஸார் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து, திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கி, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி விசாரணையை தொடங்கினார். சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அவரிடம் அளித்தனர். இதை தொடர்ந்து, கோயில் பணியாளர்கள் சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் சிசிடிவி கண்காணிப்பாளர் உட்பட பலரிடம் 12 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்று காலை 8.45 மணி அளவில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை தொடங்கினார். அறநிலையத் துறை அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை போலீஸார் தாக்கிய வீடியோ ஆதாரத்தை அளித்த கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா ஆகியோரிடம் விசாரித்தார். மதியம் 2.30 முதல் மாலை 5 மணி வரை அஜித்குமாரின் தாய் மாலதியிடம் விசாரித்தார். அவரது உறவினர் ரம்யா, அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரிடமும் விசாரணை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in