காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? - ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

காங். எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு ஏன்? - ஐகோர்ட்டில் நயினார் நாகேந்திரன் விளக்கம்
Updated on
1 min read

சென்னை: “வேட்பு மனுவில் வழக்கு குறித்த தகவல்களை மறைத்ததால் தான் ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தேன். இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் கூறினார்.

கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஜூலை 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜரானார். அவரிடம், ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது நயினார் நாகேந்திரன், 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்ற நிலையில், ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதாக கூறுவது தவறு.

வேட்பு மனுவில் வழக்கு குறித்த தகவல்களை மறைத்ததால் தான் ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தேன். இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை, என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குமூலம் அளித்த நிலையில், குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் மீண்டும் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in