டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு புகார்: செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு

டிரான்ஸ்பார்மர்கள் முறைகேடு புகார்: செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் 2021 - 23-ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய, 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளன. உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜூலை 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மனுதாரர் அளித்துள்ள புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒரு வாரத்தில் முடிவெடுக்க உள்ளனர். எனவே இந்த மனு செல்லாததாகி விட்டது,” என வாதிட்டார்.

அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், “புகார் அளித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அனைத்து ஆவணங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. மனு மீது விரிவான வாதங்களை முன்வைக்க, விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும்,” என கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in