Published : 03 Jul 2025 11:03 AM
Last Updated : 03 Jul 2025 11:03 AM
சென்னை: “பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காக நிவாரணம் கோரி போராடியவர்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா?. மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் ” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா? வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்!
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது , சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது என்ன? - முன்னதாக நேற்று சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 8 பேர் இறந்த நிலையில், 5 பேரின் உடலை உறவினர்கள் உயிரிழந்தோரின் உடலைப் பெற்று கொள்ளவில்லை. அவர்கள் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை உயர்த்தி வழங்க வேண்டும், ஆலை நிர்வாகம் 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உடல்களை பெற்றுக்கொள்ளாமல் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் நடுவே மாவட்ட எஸ்.பி.கண்ணன் போராடியவர்களை நோக்கி “ஒழுங்கா இருக்கணும், இதற்கு மேல் கோஷம் எழுபினால் வேற மாதிரி ஆயிடும்.” என மிரட்டும் தொணியில் பேசினார். இதனை சுட்டிக்காட்டியே எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கண்டித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT