Published : 03 Jul 2025 05:45 AM
Last Updated : 03 Jul 2025 05:45 AM
சென்னை: பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) தளம் வாயிலாக, தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் 9.40 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் தரவுகளை ஒருங்கிணைத்து பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) செயல்பட்டு வருகிறது.
கல்வி மேலாண்மை தகவல் அமைப்பை (எமிஸ்) போலவே, ஒற்றைச் சாளர முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளமானது, தரவுகளை ஒருங்கிணைப்பது, செயல்முறைகளைதானியங்கி மயமாக்குவது, உயர்கல்வித் துறைக்கு தேவையான பகுப்பாய்வுகளை செய்ய உதவுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, எமிஸ், என்பிசிஐ, இ-சேவை, ஆதார் போன்ற பிற தளங்களில் உள்ள விவரங்களுடன், இத்தளத்தில் உள்ள மாணவர் தரவுகளை சரிபார்த்து, அதை உறுதி செய்கிறது. அதேபோல், தகவல் பகிர்வுக்காக மாநிலக் கல்வி உதவித்தொகை இணையதளம், நான் முதல்வன், முதலமைச்சர் தகவல் பலகை போன்ற தளங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தமிழ் புதல்வன், புதுமைப்பெண் மற்றும் பிற மாநில உதவித்தொகை திட்டங்களுக்கும் முதன்மை தரவு ஆதாரமாக யுமிஸ் தளம் விளங்கி வருகிறது.
இந்த தளத்தின் வாயிலாக இதுவரை 81 பல்கலைக் கழகங்கள், 5,490 கல்வி நிறுவனங்கள், 30 துறைகள் மற்றும் 23.90 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ள நிலையில், தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களிலும் மொத்தம் 9.40 லட்சம் மாணவர்கள் பயனடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT