

கோவில்பட்டி: மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தை புதுப்பிக்காத தமிழக அரசை கண்டித்து எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்து பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு சம்பவம் சாத்தான்குளத்தில் நடந்தது. அது தவறுதான். அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அதில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் இன்று வரை வெளி வர முடியாத நிலை உள்ளது. ஆனால், இந்த ஆட்சியில் இதுவரை 25 சம்பவங்கள் நடந்துள்ளன.
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு இன்றைக்கு அமைச்சராக உள்ள கீதாஜீவன்தான் காரணம். அந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டது யார்? போராட்டத்தை தொடங்கி வைத்த தலைவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் பாதிக்கப்பட்டார்களா? அப்பாவிகள் 13 பேர் உயிரிழந்தனர்.
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்த அரசு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மூடி மறைக்கப் பார்த்தார்கள். நீதிமன்றம் தலையிட்ட பின்னர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அதில், யார் அந்த சார்? என்ற விவகாரத்துக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பதில் கிடைக்கும். இந்த ஆட்சியே இவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. தறிகெட்டு ஓடுகிறது. இவ்வாறு அவர் தெரி்வித்தார்.