

மதுரை: போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமார் (29), இவரை தங்கநகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையில் தாக்கியதில் ஜூன் 29-ம் தேதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்நிலைய மரண சம்பவத்தை கண்டித்தும் நீதி கேட்டும் தவெக சார்பில் ஜூன் 3-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று தவெக தலைவர் விஜய் மடப்புரத்தில் உள்ள அஜித்குமார் வீட்டுக்குசென்றார்.
அங்கு அவரது தாயார் மாலதி, அவரது சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உடனிருந்தார். அப்போது அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அளித்தார். இரவு 7.50 மணிக்கு வந்தார். ஆறுதல் கூறி நிதியுதவி அளித்துவிட்டு இரவு 7.53 மணிக்கு மடப்புரத்திலிருந்து புறப்பட்டார்.
இதுகுறித்து அஜித்குமாரின் தாயார் கூறுகையில், “விஜய் எங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தங்களது மகனின் இழப்பு பெரிய இழப்பு. எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடுசெய்ய முடியாது. தங்களுக்கு எப்போதும் தவெகவும், நானும் உடனிருப்போம் என்றார்” எனத் தெரிவித்தார்.