

சென்னை: விமர்சனங்களை பார்த்து கவலைப்படாமல் மக்கள் தேவையறிந்து செயல்படுவதே எனது பணி என்று திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ராஜா அண்ணாமலைபுரம், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், 32 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைகளை வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது: திமுக ஆட்சியில் 3,177 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். 997 கோயில்களுக்கு சொந்தமான ரூ.7, 701 கோடி மதிப்பிலான, 7, 655.75 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். 2,03,444ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ஆயிரம் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 12,876 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 30 கோயில்களில், நாள் முழுவதும் திருவமுது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இதுவரை 2376 திருமணங்களை, கட்டணமில்லாமல், சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கி நடத்தி வைத்திருக்கிறோம். திமுக அரசு செய்யும் இதுபோன்ற சாதனைகளை, சமூகத்தை பிளவுப்படுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
பக்தி என்ற பெயரில் பகல்வேஷம்போடுபவர்களால் தாங்க முடியவில்லை. ஆனால், உண்மையான பக்தர்கள், இந்த ஆட்சியின் ஆன்மீகத் தொண்டை பாராட்டுகின்றனர். ஆதரவற்ற அவதூறுகள், விமர்சனங்களை பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. மக்களின் தேவையறிந்து செயல்படுவதே என்னுடைய பணி. உண்மையான பக்தர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.