சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு - நடந்தது என்ன?

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடங்கள்.
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடங்கள்.
Updated on
1 min read

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவர் சாத்தூர் அருகேயுள்ள சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலையை நடத்திவருகிறார். இங்கு 48 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை 20 தொழிலாளர்கள் ஆலையில் பேன்சிரக பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மணி மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென உராய்வு காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 அறைகள் இடிந்துதரைமட்டமாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் மீனம்பட்டி மகாலிங்கம்(55), ஓ.கோவில் பட்டி ராமமூர்த்தி(45), சேர்வைக்காரன்பட்டி ராமஜெயம்(27), மத்தியசேனை கருப்பசாமி மனைவி லட்சுமி(22), சூலக்கரை வைரமணி(32), அனுப்பங்குளம் செல்லப்பாண்டி, நாகபாண்டி ஆகிய 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சேர்வைக்காரன்பட்டி அழகுராஜா(28), செவல்பட்டி லிங்கசாமி (45), மத்திய சேனை கருப்பசாமி(27), கன்னிச்சேரி மணிகண்டன்(40), சூலக்கரை முருக லட்சுமி(48) ஆகியோர் பலத்தகாயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், பட்டாசு ஆலைக்கு பணிக்கு வந்த புண்ணியமூர்த்தி என்பவரும் விபத்தில் சி்க்கி உயிரிழந்தது தெரியவந்தது.

ஆலை உரிமம் ரத்து: விபத்து நடந்த ஆலையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலைகளில் விபத்து நடக்காமல் தடுக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார். இதற்கிடையே விபத்து நடந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆலையின் போர்மென் ரவி(36) என்பவரைக் கைது செய்தனர்.

ரூ. 4 லட்சம் நிவாரணம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், "சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in