Last Updated : 02 Jul, 2025 12:09 AM

1  

Published : 02 Jul 2025 12:09 AM
Last Updated : 02 Jul 2025 12:09 AM

அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல்போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோயில் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளைப் பத்திரப்படுத்தவும், சிபிஐடி விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரி திருப்புவனம் அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக்ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மேலும், அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உட்பட 5 பேர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர் வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், மாரீஸ்குமார் வாதிடும்போது, "சிறப்புப் படை போலீஸார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்ததும் விதிமீறல்தான்.

அஜித்குமார் இறந்த பிறகு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் நகர திமுக செயலாளர் மகேந்திரன் மற்றும் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்தினர் மற்றும் ஒரு சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ரூ.50 லட்சம் பணம் கொடுப்பதாகவும், முன்பணமாக ரூ.10 லட்சம் கொடுப்பதாகவும், சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர். இந்த வழக்கின் புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர். அதனால் அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கு விசாரணையை சிறப்புப் படையிடம் ஒப்படைத்தது யார்? அஜித்குமாரை 2 நாட்கள் வெவ்வெறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல சிறப்புப் படைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? எஸ்.பி.யை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது ஏன்? பாதுகாக்க வேண்டிய காவல் துறையே மக்களைத் தாக்கலாமா? சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைப் பாதுகாக்கவே என்பதை போலீஸார் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

சட்டவிரோத காவல் மரணம், அடிப்படை உரிமைக்கு எதிரானது. திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையையும், மடப்புரம் கோயில் செயல் அலுவலர் வீடியோ பதிவையும், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்" என்றனர். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார் ஆஜராகி, பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதைப் படித்துப் பார்த்த நீதிபதி, "உடலில் ஓர் இடம்கூட விடாமல் அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியுள்ளனர். வெறித்தனமாக தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரம் போலீஸாரை இப்படி செய்ய வைத்துள்ளது. விசாரணையின்போது அஜித்குமார் குற்றவாளி இல்லை. எஃப்ஐஆர் பதிவு
செய்வதற்கு முந்தைய விசாரணையின்போது இப்படி ஒருவரைத் தாக்கலாமா? இந்த சம்பவத்தின் இயக்குநர் யார்?" என்றனர்.

மேலும், ‘‘அஜித்குமார் கொலை சிறப்புப்படை திட்டமிட்டு செய்த கொலையாகும். ஒரு அரசு தனது குடிமகனை கொலை செய்துள்ளது. இதனால் இதை சாதாரண கொலை வழக்குபோல இல்லாமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும். வழக்கு விசாரணை மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அஜித்குமார் காவல் மரணம் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிவகங்கை மாவட்ட காவல் துறை நாளை (இன்று) காலை ஒப்படைக்க வேண்டும். மாவட்ட நீதிபதி விசாரணை தொடர்பாக ஜூலை 8-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட அனைவரின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அடுத்தகட்ட விசாரணை தொடர்பாகவும் அரசுத் தரப்பில் ஜூலை 8-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளுக்கு உரிய போலீஸ் பாகாப்பு வழங்க வேண்டும். விசாரணை ஜூலை 8-க்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x