

மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சொத்து வரி மட்டுமல்லாது கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு புகார்களும் குவிவதாக தெரிய வந்துள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். இதுவரை விசாரணையில் ஏராளமானோரை விசாரித்துள்ள போலீஸார், அரசியல் பின்புலம் இல்லாத ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மட்டுமே கைது செய்துள்ளனர். விசாரணை வளையத்துக்குள் பலர் இருந்தாலும் கைது செய்யவில்லை.
சொத்து வரி முறைகேடு விசாரணை தொடரும் நிலையில், தோண்ட தோண்ட பூதம் கிளம்பிய கதை போல், தற்போது சொத்து வரி மட்டுமல்லாது கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்களை, விசாரணைகுள்ளானர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனால், முறைகேட்டில் தொடர்புடையவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ”சொத்து வரி முறைகேடு வழக்கின் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ள கட்டிடங்கள், உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் குறைவாக நிர்ணயம் செய்த சொத்து வரி, குடியிருப்புகளாக காட்டி சொத்து வரி நிர்ணயிக்கப்பட்ட வணிக கட்டிடங்கள் பற்றியும் புகார்கள் கொடுக்கின்றனர். அந்த புகார்களையும் சேர்த்து இந்த வழக்கோடு விசாரித்து வருகிறோம்.
மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட தினமும் 5 பேரை, சொத்துவரி முறைகேடு தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை மண்டலத் தலைவர்கள் யாரையும் அழைத்து விசாரிக்கவில்லை. ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், மண்டலத் தலைவர்களும் விசாரணைக்கு அழைக்க வேண்டிய பட்டியலில் உள்ளார்கள். விசாரித்தவர்கள், விசாரிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலை தற்போது வெளியிட முடியாது. அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அதன் போக்கையும் மாற்றும். கைது செய்யும்போது, அவர்கள் பெயர்களை ஒவ்வொருவராக வெளியிடுவோம். தமிழக அரசு இந்த விசாரணையை தீவிரமாக விசாரிக்க கூறியுள்ளது. அதன் அடிப்படையில் யார் தலையீடும் இன்றி விசாரணை வெளிப்படையாக நடக்கிறது’’ என்றனர்.