முதல்வரால் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆனபின்பும் பயன்பாட்டுக்கு வராத ஜவஹர்லால் நேரு மார்க்கெட்
முதல்வரால் மே 30-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு மார்க்கெட் ஒரு மாதம் ஆனபின்பும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த மார்க்கெட்டை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே ரூ.7 கோடியில் ராஜாஜி மார்கெட் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் தங்களது தேவைகள் அனைத்துக்கும் மார்க்கெட் செல்வது சிரமம் என்பதால் ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கடந்த 2023-ம் ஆண்டில் இந்த மார்க்கெட் புதுப்பிக்க ரூ.4.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மார்க்கெட்டின் தரை தளத்தில் 80 கடைகள், கழிப்பறை, வாகன நிறுத்தம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 30-ம் தேதி திறந்து வைத்தார்.
அவர் திறந்து வைத்து ஏறக்குறைய 30 நாட்கள் ஆன நிலையில் அந்த மார்க்கெட்டை மாநகராட்சி இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால், பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தேவைக்கு ரயில்வே சாலையில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டுவிட்டது. கடைகளுக்கு தனித்தனியாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே அனைத்து கடைகளுக்கும் தனியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சியிடம் முறையிட்டதன் பேரில் அவர்கள் மின்துறையிடம் பேசி வருவதாக் தெரிவித்தனர்.
இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி தலைமை பொறியாளர் கணேஷிடம் கேட்டபோது, அனைத்து பணிகளும் முடித்து வரும் ஜூலை முதல் மார்க்கெட் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
