

சென்னை: திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதை வேடிக்கை பார்ப்பது தான் முதல்வரின் வேலையா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: காவல் துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24 மணி நேரத்துக்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை.
பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோயில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை போலீஸார் அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே.
இது உண்மையா, உண்மை எனில், யார் அவர், அவர் மீது என்ன நடவடிக்கை? இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் வாகனத்தில் பூட்டி வைக்கப்பட்டது ஏன், எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா அல்லது உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசமா?
நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்துக்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல் துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?
அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும், இது கொலைதான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்போது வரையில் ஏன் பதியவில்லை, ஏன் கைது செய்யவில்லை?
இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சினையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடி பொருத்தப்பட்ட வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது அராஜக செயலாகும்.
நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட திமுக அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்போது வழக்கு பதிவு, இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா, தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.