Published : 30 Jun 2025 11:59 PM
Last Updated : 30 Jun 2025 11:59 PM

சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் சேவையை வியாசர்பாடியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, நடத்துநர், ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார். உடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு.

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமான பணிகள், பராமரிப்பு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையையும் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின்கீழ், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 625 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில், உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மதிப்பீடு ரூ.697 கோடி.

இதன் தொடர்ச்சியாக, 5 பணிமனை களிலும் உரிய கட்டிட உள்கட்டமைப்பு, மின்னேற்றம் (‘சார்ஜிங்’) செய்வதற்கான கட்டுமானங்கள், மின்சார பேருந்துகளை இயக்க தேவையான பராமரிப்பு கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை வியாசர்பாடி பணிமனையில் இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. இதை தொடர்ந்து, தமிழகத்தில் முதன்முதலாக ரூ.47.50 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழகத்திலேயே முதல்முறையாக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் முதல் கட்டமாக ரூ.207.90 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, பேருந்துகளை பார்வையிட்டு, ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை வியாசர்பாடியில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கவியரசு கண்ணதாசன் நகர், கிளாம்பாக்கம், வள்ளலார் நகர் - பூவிருந்தவல்லி, எம்கேபி நகர் - கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் படிக்கட்டு, தரையில் இருந்து 400 மி.மீ. உயரத்தில் மிக தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தொழில்நுட்ப வசதியால் பேருந்தின் தரை தளத்தை மேலும் 250 மி.மீ. கீழே இறக்கலாம்.

இதனால், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர் எளிதாக ஏறி, இறங்க முடியும். தவிர, இருக்கை பக்கவாட்டு இடைவெளி 650 மி.மீ.க்கு பதிலாக 700 மி.மீ. அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு எளிதாக இருக்கும்.

சார்ஜ் செய்தால் 200 கி.மீ. செல்லும்: ஒவ்வொரு பேருந்திலும் முன்புறத்தில் 2, பின்புறம் ஒரு கேமரா பொருத்தப்பட்டு, மகளிருக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது. தற்போது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள், குளிர்சாதன வசதி இல்லாதவை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x