Published : 30 Jun 2025 09:45 PM
Last Updated : 30 Jun 2025 09:45 PM
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஜூன் 30) நடந்தது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 593 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பிலான திரவ எரிபொருளுடன் கூடிய தேய்ப்புப் பெட்டிகளையும், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 5 ஏழைப் பெண்கள் சிறுதொழில் புரிய தலா ரூ.9,000 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் எச்.எம்.பாட்டீல் நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்த ரூ.1,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக டெல்லியில் அறிவித்துள்ளார். விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து விவசாயிகளுக்கு வரி விதிக்கும் வகையில் மாநில அரசுகளோடு இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது மகன் செந்தில்குமார் லாரி டிரைவராக பணியாற்றினார். விபத்தில் அவர் இறந்த நிலையில் சமீபத்தில் வீட்டில் தூய்மை பணி மேற்கொண்டபோது ஒரு பையில் ரூ.500 (20 நோட்டுக்கள்), 1,000 (5 நோட்டுக்கள்) இருந்தது தெரியவந்தது. இவற்றை மாற்றித் தர அதிகாரிகள் உதவ வேண்டும்” என்றார். மூதாட்டியின் நிலை கண்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை மூதாட்டிக்கு வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT