Published : 30 Jun 2025 08:03 PM
Last Updated : 30 Jun 2025 08:03 PM
சென்னை: “புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். இது வெறும் வார்த்தை ஜாலத்துக்காக அல்ல” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவரித்துள்ளார்.
தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 19-வது தேசிய புள்ளியியல் தின விழா சென்னை நந்தனத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளங்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும், தமிழக அரசின் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “புள்ளியியல் என்பது ஒரு நாட்டுக்கோ, ஒரு நிறுவனத்துக்கோ மட்டும் தேவைப்படுவது அல்ல. ஒவ்வொரு வீட்டுக்கும் தேவைப்படுகிறது. வீட்டின் மாத பட்ஜெட், வருடாந்திர பட்ஜெட் போன்றவற்றை முறையாகப் பதிவு செய்து, பகுப்பாய்வு செய்து பார்க்கும் பழக்கம் இன்றைக்கு பல குடும்பங்களில் உருவாகி இருக்கிறது. இது மிகவும் ஆரோக்கியமான மாற்றமாகும்.
ஒரு நல்ல அரசாங்கத்துக்கும் துல்லியமான தரவுகள்தான் அடிப்படை. அந்த தரவுகளைச் சேகரித்து தரக்கூடிய துறையாக இந்த புள்ளியியல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் என பல்வேறு திட்டங்களின் வெற்றிக்கு புள்ளியியல் துறை முக்கிய காரணியாக உள்ளது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த நினைக்கும் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் முதுகெலும்பாக இருப்பது புள்ளியியல்தான்.
அத்தகைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையாகச் சொல்லி வருகிறோம். இது வெறும் வார்த்தை ஜாலத்துக்காக மட்டும் அல்ல. புள்ளி விவரங்களை வெளியிட சில அரசுகள் தயங்குவார்கள். எங்கள் திட்டங்கள் மீது மிகுந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதனால்தான் திமுக ஆட்சியில் எல்லா புள்ளிவிவரங்களையும் பொது வெளியில் வைக்கின்றோம்” என்றார்.
முன்னதாக புள்ளியியல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வறிக்கை போட்டியில் மாநில, மாவட்ட அளவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் செயலர் ரமேஷ் சந்த் மீனா, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஜெயா, மாநில திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT