Published : 30 Jun 2025 07:15 PM
Last Updated : 30 Jun 2025 07:15 PM
மதுரை: டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை கைத்தறி நகரில் மதுபானக் கடையை திறக்க தடை விதிக்கக் கோரி மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், “அரசு ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அதிகரித்து வருகிறது. அரசின் கொள்கைகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, டாஸ்மாக் கடை விவகாரத்தில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
அந்தக் கால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெறாது. ஆனால் இன்றைய திரைப்படங்களில் இந்த காட்சிகள் இடம் பெறாமல் இருப்பதில்லை. டாஸ்மாக் கடையை அரசு நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? அது அரசின் பணி இல்லையே? அரசு எடுத்து நடத்துவதற்கு ஏராளமான தொழில் சார்ந்த நிறுவனங்கள் இருக்கையில் டாஸ்மாக் கடையை ஏன் நடத்த வேண்டும்? டாஸ்மாக் மது, ஆன்லைன் ரம்மி இரண்டுமே கொலை செய்பவை. டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? ஊழல், சட்டவிரோதம், குற்றச் சம்பவங்களுக்கு மது காரணமாக அமைகிறது” என்றனர்.
அப்போது, மது அருந்துவதை அரசு ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “மது அருந்துவதை ஊக்குவிக்கவில்லை என்றால், எதற்காக மது விற்பனை செய்ய வேண்டும்? ஒவ்வொரு கட்சியினரும் மதுக்கடைகள் மூடப்படும் என்கிறார்கள். ஆனால் யாரும் அதை செய்வதில்லை” என்று கூறினர். அரசுத் தரப்பில், “மதுக்கடைகளின் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள், “மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மூடியபடியே இருக்கலாமே? ஏன் அந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்?
அரசு வேலைவாய்ப்பு, கல்வி, பொது நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி நல்லதை மட்டும் செய்ய வேண்டும். மனு தொடர்பாக அரசுத் தரப்பில் எழுத்துபூர்வ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒரு வாரம் தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT