அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

பெ.சண்முகம் | கோப்புப்படம்
பெ.சண்முகம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமலாக்குவதென்பது ஏற்கெனவே தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவத்தை மேம்படுத்துவது, மக்களுக்கான ஆரோக்யமான வாழ்வை உறுதி செய்வது ஆகியவற்றில் மருத்துவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மக்களுக்கான மருத்துவ சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர் நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தோழமை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதோடு, தொடர்ச்சியாக தேசிய அளவில் விருதுகளை வாங்கி சாதனை படைத்து வருகிறது. இதற்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமலாக்குவதென்பது ஏற்கெனவே தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கை ஆகும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

மேலும், நோயாளிகள் மருத்துவர்கள் விகிதத்தை கணக்கில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதலான மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று உச்சத்தில் இருந்த அசாதாரண சூழலில், அரசுக்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்கள் பணி மகத்தானது என முதல்வரே நேரடியாக பாராட்டிய நிலையில் கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது எனும் கோரிக்கையும் அமலாக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்பதையும் கவனப்படுத்துவதுடன் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in