புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் இன்று பதவியேற்றார்.

அகில இந்திய பாஜக தலைவர் அடுத்த மாதம் (ஜூலை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதனையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலையொட்டி நேற்று வி.பி.ராமலிங்கம் மட்டுமே மாநில தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தற்போதைய தலைவர் செல்வகணபதி எம்பி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.

மாநில தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி வி.பி.ராமலிங்கம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று கட்சித்தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

புதிய மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. பதவி ஏற்பு விழாவையொட்டி நகர பகுதியில் விழாவுக்கு வரும் தலைவர்களை வரவேற்று முக்கிய சாலை சந்திப்புகள், சதுக்கங்கள், வழியெங்கும் பேனர்கள் வைத்திருந்தனர்.

புதிய தலைவர் பதவியேற்புக்காக காரைக்கால், மாகி, ஏனாம் மற்றும் புதுவையின் பல்வேறு தொகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று மதியம் திரண்டனர். அங்கு பதவியேற்பு விழா நடந்தது. புதிய தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி அகிலன் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அகில இந்திய பொதுச்செயலாளர் தருண்சுக் முன்னிலையில் வி.பி.ராமலிங்கம் பதவியேற்றார். அவரிடம் முன்னாள் தலைவர் செல்வகணபதி எம்.பி கட்சியின் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in