Published : 30 Jun 2025 02:54 PM
Last Updated : 30 Jun 2025 02:54 PM
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவுக்கான மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மாரடைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு வருபவர்களுக்கு இதய பிரிவு சிகிச்சைக்கான மருத்துவர்கள் இல்லாததால் மற்ற மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் டயாலிஸிஸ், கண், காது மற்றும் மூக்கு தொண்டை, குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வரும் நிலையில், இதய சிகிச்சை பிரிவுக்கு கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உரிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.
இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுநர்கள் சிலரிடம் கேட்டபோது, இதய சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சைக்காக வந்த 8 பேர் மருத்துவமனையிலும், வெளியில் செல்லும்போதும் இறந்துள்ளனர் என்றனர்.
ஜூன் 2-வது வாரத்தில் தண்டலம் பகுதியை சேர்ந்த வரதராஜன் என்பவர் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு ஸ்டென்ட் வைத்திருந்தார். அவருக்கு மருத்துவமனையில் திடீரென்று இதய அடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் அவர் உயிரிழந்தார். இதய சிகிச்சை பிரிவு மருத்துவர் இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கக் கூடும். இதுகுறித்து காஞ்சிபுரம் இணை இயக்குநர் ஹிலாரினி ஜோசிட்டா நளினியிடம் கேட்டபோது, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு இதய சிசிச்சை பிரிவு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணியில் சேருவார்கள் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT