Published : 30 Jun 2025 02:10 PM
Last Updated : 30 Jun 2025 02:10 PM
சென்னை: விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவுக்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாயை 5 தவணைகளாக வழங்கினேன். தேர்தல் முடிந்ததும் 2023-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் என 5 காசோலைகளை வழங்கினார். ஆனால், காசோலையில் பணம் இல்லை என திரும்பிவிட்டது. இதையடுத்து, பணத்தை திரும்பி வழங்க உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
டாக்டர் லட்சுமணன் தொகுதி எம்எல்ஏ-வாகவும், திமுக மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால் வழக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை. விசாரணை நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் லட்சுமணன் எடுத்துள்ளார். எனவே, விசாரணையை விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மாற்ற வேண்டும். அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,” என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் எம்எல்ஏ லட்சுமணன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ரூ.50 லட்சம் மட்டுமே 2021-ல் வாங்கப்பட்டது. 2.5 கோடி ரூபாய் என்பது உண்மையில்லை. நண்பர்களிடம் கடனாக வாங்கி கொடுத்தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. 50 லட்சம் ரூபாய்க்கு வழங்கிய 5 காசோலைகளை 2.5 கோடி ரூபாய்க்கு மாற்றியுள்ளார்.
பணத்தை திருப்பி தர சமரச பேச்சுவார்த்தைக்கு மனுதாரர் முன்வரவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவின் படி விசாரணை விரைவு படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. இந்த வழக்கு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே தொடரப்பட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே உயர் நீதிமன்றம் 1 வருடத்தில் வழக்கை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், போதுமான ஆதரங்கள் இல்லாமல் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT