Published : 30 Jun 2025 06:15 AM
Last Updated : 30 Jun 2025 06:15 AM
சென்னை: ஜூலை 1-ல் மருத்துவர்கள் தினத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவக் கட்டமைப்பிலும், சுகாதாரத் துறை செயல்பாடுகளிலும் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. ஆனால் அதற்கான பங்களிப்பைத் தரும் அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது. தகுதிக்கேற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாகவே போராடி வருகிறோம்.
அதுவும் நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊதிய கோரிக்கைக்காக அரசு மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்துள்ளார். சுதந்திர இந்தியாவில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பதுதான் வருத்தமான உண்மை. 2019-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
அடுத்து அமையும் திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். ஆனால் இன்று வரை கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகு 4 மருத்துவர் தினங்களை பார்த்துவிட்டோம். மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அரசு எதையுமே செய்யவில்லை. வரும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர் தினத்தை கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டு மருத்துவர்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வரை வேண்டுகிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை மருத்துவர்கள் தினத்தில், தமிழக முதல்வரின் கைகளால் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை தரம் உயர்த்தும் வகையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT