Published : 30 Jun 2025 05:45 AM
Last Updated : 30 Jun 2025 05:45 AM
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, பரந்தூர் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் தொகை வழங்க முன்வந்த அரசு, குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், தொழில் நிறுவனம் மற்றும் முதலீட்டு துறை செயலர் அருண் ராய், நிலங்களுக்கான விலை நிர்ணய அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:பரந்துரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்காக 3,774.01 ஏக்கர் தனியார் பட்டா நிலங்களும், 1,972.17 ஏக்கர் அரசு நிலங்களும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. தனியார் நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி, பரிந்துரையை அரசுக்கு அனுப்பியது.
அதன்படி, வழிகாட்டி மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை உள்ள நிலங்களுக்கு இழப்பீடு மற்றும் ஊக்க தொகையுடன் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சதுப்பு நிலங்களும், வறண்ட நிலங்களும் வகைப்படுத்தப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 374.53 ஏக்கர் நிலத்துக்கு மட்டும் குறைந்தபட்ச தொகை ஏக்கருக்கு ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டி மதிப்பு ரூ.17 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள 996 ஏக்கர் பரப்பு நிலங்களுக்கு ரூ.2.51 கோடி வரை ஏக்கருக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளாதவர்களின் நிலங்களை உரிய துறைகளின் மூலமாக மதிப்பீடு செய்து, அவர்களுக்கும் 100 சதவீதம் இழப்பீடு மற்றும் 25 சதவீத ஊக்கத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT