Published : 30 Jun 2025 04:24 AM
Last Updated : 30 Jun 2025 04:24 AM
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகளை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்தது. பின்னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டது. இதை பெறுவதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் திட்டத்துக்கு தகுதியற்றவர்களாக கருதப்பட்டனர்.
அதேநேரம், அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதியுள்ள பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது.
இதற்கிடையே, திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜூலை 15 முதல் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரூ.1,000 தொகை வழங்கப்படும். விண்ணப்பங்களுக்கு 45 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்” என உறுதியளித்தார்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 3 முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அளித்து திட்டத்தின் பயனை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.
மேலும் இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம். கணவரால் கைவிடப்பட்ட 50 வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை சிறப்பு திட்ட செயலாக்கத்துறைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT