Last Updated : 29 Jun, 2025 07:25 PM

 

Published : 29 Jun 2025 07:25 PM
Last Updated : 29 Jun 2025 07:25 PM

தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

கோவை: 2026 தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து தங்கள் கட்சி சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்வு, ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்தேன். இரவு கிருஷ்ணகிரி சென்று நாளை அங்கு மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறேன்.

அனைவரும் கல்வி கற்க வேண்டும், படித்தால் மட்டும் தான் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் விருப்பம். காங்கிரஸ் கட்சி விழாவில் சுதீஷ் கலந்து கொண்டது பல ஆண்டு காலமாக, தொடரும் நட்பின் வெளிப்பாடு. அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தேமுதிக தற்போது எட்டு மண்டலமாக பிரிந்து தமிழ்நாடு முழுவதும் 8 மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை அமைத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு பின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சியில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். கடலூரில் 2026-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக கட்சி தலைமை வகித்தால் சிறப்பாக இருக்கும். கூட்டணி என்பது வரவேற்கத்தக்கது.

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக நடிகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அவர்கள் மட்டும் அதை பயன்படுத்தியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தமிழகமே போதை வஸ்துக்களால் மூழ்கி இருக்கிறது. இது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும். போதை இல்லாத, டாஸ்மாக் மதுமானம் இல்லாத, கள்ளச் சாராயம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. மேம்பால பணிகள் தொய்வாக மேற்கொள்ளப்படுகின்றன. குப்பை தரம் பிரித்தல், பாதாள சாக்கடை திட்ட பணி என பல பிரச்சினைகள் உள்ளன. கோவை என்றாலே சுத்தமான நகரம் என்பதை கேப்டன் காலத்தில் நான் பார்த்துள்ளேன். ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. மிகவும் வருந்தத்தக்கது. இதில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் விஜய் பொருத்தவரை நான் அவருக்கு அறிவுரை கூற வேண்டியது இல்லை. அவருக்கான முடிவை அவர் தான் எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x