Last Updated : 29 Jun, 2025 05:36 PM

 

Published : 29 Jun 2025 05:36 PM
Last Updated : 29 Jun 2025 05:36 PM

ஏலகிரி மலையில் விரைவில் ரோப் கார்: சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில்  கோடை விழா நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர்: சுற்றுலாப் பயணிகளை கவர ஏலகிரியில் விரைவில் ‘ரோப் கார்’ அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலையில் கோடை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி வரவேற்றார். திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அரசு சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கோடை விழா அரங்கு அருகே வனத்துறை, மருத்துவத்துறை, வேளாண் துறை, காசநோய் தடுப்புத்துறை, சித்த மருத்துவம், மூலிகை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அதேபோல, ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுப்பதற்காக ஆங்காங்கே செல்பி பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்தில் நீலகிரி மலையை போல, ஏழை பங்காளர்களின் சுற்றுலாத் தலமான ஏலகிரி விளங்க அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி போல் ஏலகிரியும் வளர, அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கவும் மத்திய அரசிடம் திட்ட அறிக்கை அனுப்பி ஏலகிரி மலை வளர்ச்சிக்கு பெரும் நிதியை வழங்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே மலைவாழ் மக்களுக்காக கோடை விழா தொடங்கப்பட்டது.

12-ம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் ஏலகிரி மலையைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டிலேயே ஏலகிரி மலை இருந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏலகிரி மலை ரூ.10 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளும், ரூ.15 கோடியில் 14 கிராமங்களை இணைக்கும், 10 கி.மீட்டர் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மலையில் வாழும் பெண்கள் ரத்தசோகை நோயால் அவதிப்படக்கூடாது என்பதால் அரசு சார்பில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலையில் 7-ம் ஆண்டு நூற்றாண்டு நடுக்கல்லில் தாயலூரில் வசித்த வீரன் குறித்த குறிப்புகள் உள்ளது. இதுவே ஏலகிரியின் வரலாற்று தொன்மைக்கு சாட்சியாகும். இங்கு ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷ்ண நிலை உள்ளதால், அனைத்து தரப்பினரும் விரும்பி வரும் சுற்றுலா தலமாக ஏலகிரி விளங்கி வருகிறது. பெரும் பணக்காரர்களுக்கு ஊட்டி, கொடைக்கானல் இருப்பதுபோல் ஏழை, எளிய மக்களுக்கு ஏலகிரி மலை சுற்றுலா தலம் விளங்குகிறது.

இப்பகுதி மக்களாளேயே உருவாக்கப்பட்ட புங்கனூர் ஏரி வரலாற்று புகழ் பெற்றது. 2021-2022-ம் ஆண்டு ரூ.3 கோடி மதிப்பில் ஏலகிரியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றது. மேலும் ஏலகிரி வளர்ச்சிக்காக ரூ.10 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இங்கு உள்ள இயற்கை பூங்கா, படகு குழாம் சீர்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன், ஏலகிரி மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். திமுக ஆட்சி இந்திய துணை கண்டத்தில் உள்ள அனைத்து ஆட்சியாளர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆனந்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி செந்தில்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீகிரிவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏலகிரி கோடை விழாவையொட்டி பள்ளி மாணவ - மாணவர்களின் பரத நாட்டியம், சிலம்பம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் ஏலகிரியில் உள்ள படகு குழாம், இயற்கை பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.

ஏலகிரி கோடை விழா கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் தற்போதும் கோடை விழா நடைபெறுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டு கோடை விழா 1 நாள் மட்டும் நடைபெறும் என்ற திடீர் அறிவிப்பு பொதுமக்களுக்கு எளிதில் சென்று சேராததால், இன்று ஒரு நாள் நடைபெற்ற ஏலகிரி கோடை விழாவுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் கோடை விழா ஆட்கள் இல்லாமல் மக்கள் வரத்து குறைந்த அளவே காணப்பட்டது.

கோடை விழாவிற்கு வருகை தந்த, அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை ஏலகிரி மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடியும், தப்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x