Last Updated : 29 Jun, 2025 06:17 PM

2  

Published : 29 Jun 2025 06:17 PM
Last Updated : 29 Jun 2025 06:17 PM

‘விருதுநகரே விடைபெறுகிறேன்...’ - வைரலாகும் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் உருக்கமான கடிதம்

விருதுநகர்: ‘விருதுநகரே விடைபெறுகிறேன்' என்ற விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி அன்று பொறுப்பேற்றார். அப்போது முதல், ‘காபி-வித் கலெக்டர்’ என்ற பெயரில் தொடர்ந்து 200-க்கு மேல் நிகழ்ச்சி நடத்தியது, அரசுப் பள்ளி மாணவர்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது, பசுமை ஆர்வலர் திட்டம், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம். கற்றது ஒழுகு திட்டம், அறிவோம் தெளிவோம் திட்டம், மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க் கூட்டம், உண்டு உறைவிட பயிற்சி, கரிசல் இலக்கிய அறக்கட்டளை, திருக்குறள் மாணவர் மாநாடு, விருதுநகர் கல்வி அறக்கட்டளை, உயர்கல்வி வழிகாட்டு மையம், மலரும் புன்னகைத் திட்டம், ‘இரும்பு கண்மணி’ திட்டம் என மாணவ, மாணவிகள், இளம்பெண்கள், எழுத்தாளர்கள் என பலருக்குமான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

அதோடு, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் விருதுநகர் முதலிடம் பெற்றதால் முதல்வரிடமிருந்து விருதும், அரசு மருத்துவமனைகளில் இறப்பில்லாத பிரசவம் என்ற இலக்கை அடைந்ததாலும், முன்னேற விழையும் மாவட்டத்தின் பல்வேறு காரணிகள் உயர்வு காரணமாக மத்திய அரசு விருதையும் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பெற்றார்.

எழுத்தாளர்களுக்கான கரிசல் இலக்கிய மாநாடு, மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு, புத்தகத் திருவிழா, உணவுத் திருவிழாக்களை சிறப்பாக நடத்திய பெருமையும், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்த பெருமையும், விருதுநகர் மாவட்டம் குறித்து 21 புத்தகங்கள் வெளியிட்ட பெருமையும் இவருக்கு உண்டு.

இந்நிலையில், கடந்த வாரம் திங்கள்கிழமை, பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்) ஜெயசீலன் இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, நேரிலும் சமூக வலைதளத்திலும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு பலர் வாழ்த்துத் தெரிவித்து வருவதோடு, "மிஸ் யு சார்" என பலர் உருக்கமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, "விருதுநகரே விடைபெறுகிறேன்" என முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், “கலெக்டராக வேண்டும் என்ற கனவு 10ம் வகுப்பில் எனக்கு வந்தது. கல்வி மற்றும் கடும் உழைப்பின் வழியாக ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பொறுப்புகளுக்குப் பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியதை எண்ணிப் பெருமை கொள்கிறேன். விருதுநகர் மாவட்டம் தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறையில் கடந்த ஓரு நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இம்மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது.

கல்வி, உயர் தொழில்கள் மற்றும் பொருளாதாரத்தில் நம் மாவட்டம் இன்னும் பல மடங்கு உயர்ந்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவலர்கள், சார் நிலைப் பணியாளர்கள், நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்பும், நன்றியுடன் வீ.ப.ஜெயசீலன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x