Last Updated : 29 Jun, 2025 03:24 PM

1  

Published : 29 Jun 2025 03:24 PM
Last Updated : 29 Jun 2025 03:24 PM

“காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்காக முதல்வர் பதவி விலக வேண்டும்” - அன்புமணி

சென்னை: திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வந்த மருத்துவர் ஒருவர், அவரது மகிழுந்தில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மகிழுந்தை நிறுத்துவதற்கு உதவி செய்த கோயிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் என்பவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்து விட்டார். அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய சாத்தான்குளம் காவல்நிலையப் படுகொலைகள் எவ்வாறு நடந்தனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்துவிட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட போது,’’பேய் ஆட்சி செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்பதை இந்த படுகொலைகள் நினைவுபடுத்துகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.” என்று வலியுறுத்தியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சி இருந்தால், 5 ஆண்டுகளுக்கு வலியுறுத்தியதைப் போல இப்போது பதவி விலக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x