Published : 29 Jun 2025 03:12 PM
Last Updated : 29 Jun 2025 03:12 PM
திருச்சி: திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று (29-ம் தேதி) அதிகாலை 1.28-மணிக்கு, திருச்சி விமான நிலைய இயக்குநர் மற்றும் திருச்சியில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையம் சார்ந்தவர்களின் மின்னஞ்சல்களுக்கு, “வெடிபொருட்கள் உடனடியாக வெளியேறுங்கள். விமான நிலையம் மற்றும் விமானங்களைச் சுற்றி வைக்கப்பட்டுள்ளகுப்பைகளுக்குள் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தை விட்டு அவசரமாக வெளியேற வேண்டும். நீங்கள் அவசரமாக வெளியேற வேண்டும், இல்லையெனில் உள்ளே இருப்பவர்கள் இறந்துவிடுவார்கள், கைகள் மற்றும் கால்களை இழப்பார்கள், அல்லது தலை துண்டிக்கப்படுவார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகள் நாங்கள், "ரோட்கில்" (Roadkill) மற்றும் ‘கியோ’ (Kio)” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த விமான நிலைய மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் விமான நிலைய முனையம், வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து விமான நிலைய மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் விமான நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
அவசர ஆலோசனை: இதற்கிடையே திருச்சி விமான நிலைய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விமான நிலைய முனைய மேலாளர் பிரஜித், சிஐஎஸ்எப் டெபுடி கமாண்ட்டன்ட் திலீப் நம்பூதிரி, விமான நிலைய காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் விமான நிலைய அனைத்து ஏர்லைன்ஸ் மேனேஜர்கள், சுங்கத்துறையினர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT