புதியவர்களுக்கு முழு ஒத்துழைப்பு: புதுச்சேரி பாஜக மாநில செயற்குழுவில் உத்தரவு

புதியவர்களுக்கு முழு ஒத்துழைப்பு: புதுச்சேரி பாஜக மாநில செயற்குழுவில் உத்தரவு
Updated on
1 min read

புதுச்சேரி: புதியவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என பாஜக மாநில செயற்குழுவில் உத்தரவிடப்பட்டது.

புதுச்சேரி பாஜகவில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமார் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமார் பதவியேற்க உள்ளார். இதைபோல ஏற்கெனவே நியமன எம்எல்ஏக்களாக இருந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக புதிய நியமன எம்எல்ஏக்களாக முதலியார்பேட்டை செல்வம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், காரைக்கால் தொழிலதிபர் ராஜசேகர் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து புதிய தலைவரும் தேர்வு செய்யப்படவுள்ளார். கட்சியில் திடீரென்று செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்குவதற்கான கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வ கணபதி தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமார், எம்எல்ஏகள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், முன்னாள் எம்எல்ஏக்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கட்சியில் அதிரடியாக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஏன் என்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் விளக்கினர். புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள தலைவர், அமைச்சர், நியமன எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு வழக்கம்போல் முழுமையான ஒத்துழைப்பு கட்சி நிர்வாகிகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தேர்தல் அதிகாரிகள் வாக்குவாதம்: புதுவை பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் பதவிக்கு மனு தாக்கல் நடந்ததது. 2-ம் தளத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தேர்தல் அதிகாரியாக அகிலன் அமர்ந்திருந்தார். அவர் அருகே இணை தேர்தல் அதிகாரி வெற்றி செல்வம் வந்து அமர்ந்தார்.

அதற்கு அகிலன் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரி மட்டுமே அமர வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் அதை வெற்றிச்செல்வன் ஏற்கவில்லை. இதனால் நான் எழுந்து சென்று விடுவேன் என்று அகிலன் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர் இருவரும் இணைந்து வி.பி.ராம லிங்கத்திடம் வேட்பு மனுவை பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in