Published : 29 Jun 2025 01:26 PM
Last Updated : 29 Jun 2025 01:26 PM
புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கலில், முன்னாள் நியமன எம்எல்ஏ ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக நாளை அவர் முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.
புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி.சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி.ராமலிங்கம், 22-ம் தேதி மார்ச் மாதம் 1962 ஆண்டு பிறந்தார். இவர் 2019-ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவர் 2021-ம் ஆண்டு மே 11-ம் தேதி நியமன சட்டமன்ற உறுப்பினாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர் கடந்த 27-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பாஜக புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலனிடம் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய்.சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி.ராமலிங்கம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். நாளை முறைப்படி அறிவிப்பு வெளியாகிறது.
இந்த நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தற்போதைய பாஜக தலைவர் செல்வ கணபதி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனித்தனியாக மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT