Published : 29 Jun 2025 11:41 AM
Last Updated : 29 Jun 2025 11:41 AM

தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் - அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

நாகை அருகே வயது முதிர்வால் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதியில்லாததால், அவரது மகன்களே சாக்கு மூட்டையில் கட்டி தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் காந்திமகான் கடற்கரை சாலையில் உள்ள தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தைலமரத் தோப்பில் நேற்று முன்தினம் மாலை கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், நாகை டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் அழுகிய நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், தொடர்ந்து நடத்திய விசாரணையில், சாக்கு மூட்டையில் உயிரிழந்து கிடந்தது வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த உசேன் மனைவி மும்தாஜ் (75) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியது: உசேன்- மும்தாஜ் தம்பதிக்கு சையது (45), சுல்தான் இப்ராஹிம் (43) ஆகிய 2 மகன்களும், ஜீனத்தம்மாள் (54) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். டீக்கடையில் வேலை பார்த்து வந்த உசேனின் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் இருந்துவந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த ஏப்ரலில் உசேன் உயிரிழந்தார்.

தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு மும்தாஜும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய போதிய பொருளாதார வசதி இல்லாததால், சையது, சுல்தான் இப்ராஹிம் ஆகிய இருவரும் சேர்ந்து, மும்தாஜின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, தைலமரத் தோப்பில் வீசிச் சென்றுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x