“செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்?” - சீமான் கேள்வி

“செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்?” - சீமான் கேள்வி
Updated on
1 min read

செம்மொழிக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.

சீமான் நேற்று சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்க் கடவுள் முருகன் என்று சொல்லிவிட்டு, தமிழில் வழிபாடு நடத்துவதில் திமுக ஆட்சியாளர்களுக்கு என்ன பிரச்சினை. போனால் போகட்டும் என தமிழிலும் குடமுழுக்கு என்கின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். அவரது பெயரில் அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் அரங்கம். செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தமிழ் செம்மொழியாக இருந்ததா, இல்லையா? கருணாநிதி சொன்னதால் செம்மொழியாக ஆனதா?.

அதானி துறைமுகத்தில் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. போதைப்பொருள் பயன்படுத்தியவரை கைது செய்தீர்கள், விற்றவரை ஏன் கைது செய்யவில்லை. நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும்தான் குற்றவாளிகளா? அவர்கள் அப்பாவிகள். ஸ்ரீகாந்த்துக்கு விற்றவர் அதிமுக பிரமுகர் என திசை திருப்புகின்றனர். திமுகவை சேர்ந்தவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?

மத்திய அரசு நிதி தராததால் வெள்ள நிவாரணம், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று திமுக அரசு சொல்கிறது. மறைமுகமாக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்துகொண்டு, வெளியில் சண்டைபோடுவது போல் நாடகத்தை திமுக நடத்துகிறது.

திமுகவை ஒழிக்க வேண்டும் என பாஜக சொல்கிறது, பாஜகவை வளரவிடக் கூடாது என திமுக சொல்கிறது. என்னுடைய கனவு இருவரையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் தனித்து நிற்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in