Published : 29 Jun 2025 10:49 AM
Last Updated : 29 Jun 2025 10:49 AM
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையும், கூட்டணித் தலைவர்களும் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
மத்திய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திருச்சி திருவெறும்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கிய காங்கிரஸ் கட்சியுடன்தான் திமுக தற்போது கூட்டணி வைத்துள்ளது. இந்தியாவில் அதிக அளவு போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் உள்ளது. தற்போது அதில் தமிழகமும் சேர்ந்துள்ளது.
வருங்கால சமுதாயத்தை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அழிக்கப் பார்க்கும் திமுக அரசு தொடர்வது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து. திமுக கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிக சீட் கேட்டார் என்பதற்காக, அந்தக் கட்சியை உடைக்கத் தொடங்கி, முக்கிய நிர்வாகி ஒருவரை திமுகவில் இணைத்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமையும், கூட்டணித் தலைவர்களும் முடிவு செய்வார்கள். டெல்லியில் மோடி இருப்பதுபோல, தமிழகத்தில் பழனிசாமி இருப்பார் என்று அமித் ஷா கூறியுள்ளார். அதனால், இவர்களைக் கேட்டுத்தான் பாஜக தலைவர்கள் முடிவு செய்வார்கள். பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுகவுக்கு கவலை வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT