Published : 29 Jun 2025 10:25 AM
Last Updated : 29 Jun 2025 10:25 AM
மாவட்டம் தோறும் மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் மாநில தலைவரை தேர்தெடுக்கும் பொறுப்பு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், தமிழகத்தில் மாநில நிர்வாகிகள் பொறுப்புகள் வழங்கப்படுவது தொடர்பான பல்வேறு ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, அந்தமானின் மாநில தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தமிழிசைக்கு தேசிய தலைவர்கள் வழங்கினர். இதையடுத்து வரும் 1-ம் தேதி அந்தமான் சென்று அங்குள்ள மாநில தலைவரை தமிழிசை தேர்வு செய்ய உள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வெற்றியும் பெறுவோம். மாணவ மாணவியர்கள் மீதும் இவர்களுக்கு அக்கறை இல்லை. அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவிகள், விடுதியில் பிரச்சினை என்று வீதியில் வந்து போராடுகிறார்கள். இது மிகவும் வேதனைக்குறியது.
கடந்த ஆட்சியில் நடந்த சின்ன சின்ன விஷயங்களை கூட ஸ்டாலின் ஊதி பெரிதாக்கி கொண்டிருந்தார். ஆனால், இந்த ஆட்சியில் நடைபெறும் பெரிய பெரிய விஷயங்களை கூட மறைத்து கொண்டிருக்கிறார்கள். எல்லா கூட்டணி குழப்பத்துக்கு காரணம் பாஜக என்று செல்வப்பெருந்தகை கூறி வருகிறார். முதலில் உங்கள் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறதா என்பதை பாருங்கள்.
ஒரு போதை தலைநகரமாக தமிழகம் மாறி வருகிறது. ஆர்டர் செய்தால் போதைப் பொருட்கள் வீடு தேடி வரும் நிலை உருவாகியுள்ளது. திமுக அரசு மாவட்டம் தோறும் மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக் கிறார்கள். போதையின் பாதையில் செல்லாதீர்கள் என கூறிக் கொண்டு, முதல்வரே போதைக்கு பாதை அமைத்து கொடுத்து கொண்டிருக்கிறார். போதை கலாச்சாரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT