Published : 29 Jun 2025 10:24 AM
Last Updated : 29 Jun 2025 10:24 AM

செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ல், தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

உலகின் 4-வது வீரர்: இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ல் வென்றதற்கும் அதன்மூலம் கிளாசிக்கல் வீரர் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்ததுக்கும், லைவ் ரேட்டிங் மதிப்பீட்டில் உலகில் 4-வது வீரராக உயர்ந்ததுக்கும் பிரக்ஞானந்தாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிப் பாதையில் தொடரும் வகையரான அவரது கரங்களில் செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம் உள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: நம்ம சென்னையின் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தா, உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ஐ வென்றதன் மூலம் மீண்டும் ஒருமுறை செஸ் உலகில் பெரும் அலையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தையும், உலகளவில் 4-வது இடத்தையும் பிரக்ஞானந்தா பிடித்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சாதனைகள் பெருமையளிக்கிறது. அவரது வெற்றிகள் மென்மேலும் தொடரட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x