மதுரை காமராசர் பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகுதியானவர்தான்: நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அமைச்சருக்கு கடிதம்

மதுரை காமராசர் பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகுதியானவர்தான்: நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அமைச்சருக்கு கடிதம்
Updated on
1 min read

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், பல்கலைக்கழக சட்டங்களின்படி தகுதியானவர். இதுகுறித்து தவறான விளக்கமளிக்கும் ஆசிரியர் சங்கத்தினரை கண்டிக்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் பெ.முருகன், செயலாளர் கோ.சுந்தரமூர்த்தி ஆகியோர் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குறித்து காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஜூன் 24-ம் தேதிய கடிதத்தில் தவறான தகவல்கள் அளித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டத்தின் அத்தியாயம்-6 பிரிவு 12-ஐ மேற்கோளுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கான தகுதி குறித்து தவறான விளக்கம் அளித்துள்ளது. இப்பிரிவு தேர்வு கட்டுப்பாட்டாளருக்கான தேர்வுக்குழுவின் அமைப்பை மட்டும் விவரிக்கிறது. இதை தகுதி நிபந்தனையாக காண்பிப்பது தவறான மேற்கோள்.

பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள விதிமுறைகள்படி பதிவாளர்,நிதி அலுவலர்,தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஆகிய நேரடி நியமனப் பணிகளுக்கு 15 ஆண்டுகள் நிர்வாக அனுபவம், அதில் 8 ஆண்டுகள் துணைப் பதிவாளர் அல்லது அதற்கு இணையான பதவியில் இருந்திருக்க வேண்டும் எனவும், நிர்வாகத் துறையை சேர்ந்த அலுவலர்கள் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் என்பதை விளக்குகிறது. மேலும் காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்ட பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணி நியமன அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் இதே தகுதி தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அச்சங்கத்தினர் கூறுவது போல் தேர்வுகள் கட்டுப்படுத்தும் அலுவலரே தேர்வுக்குழு தலைவர்கள் மற்றும் வினாத்தாள் தயாரிப்பாளர்களை நியமிக்கிறார் என்பதும் தவறானது. இத்தகைய நியமனங்கள் சிண்டிகேட் குழுவினரால் செய்யப்படுகின்றன. மேற்கோள் காட்டும் 2023 ஆக. 18-ம் தேதி சிண்டிகேட் தீர்மானம் (18) என்பது நோடல் அலுவலர்கள் பற்றியது. இதில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பற்றிய குறிப்பு இல்லை. அதேபோல் 2021 டிச. 20-ம் தேதி சிண்டிகேட் தீர்மானத்தில் (57) தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பதிவாளர் பதவியை தற்காலிகமாக நிரப்பும் பொறுப்பை துணைவேந்தர் சிண்டிகேட் ஒப்புதலுடன் கல்வியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் 2 துறைகளிலிருந்தும் தேர்வு செய்யலாம். அதன்படி தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள், பல்கலைக்கழக சட்டங்களின்படி தகுதியானவர்.

தற்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், காமராசர் பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பணிச்சேவையுடன், கடந்த 10 ஆண்டுகளாக மூத்த துணை பதிவாளராக பணியாற்றி வருகிறார். மேலும் டாக்டர் பட்டம் என்ற உயர்கல்வித் தகுதியும் பெற்றுள்ளார். இவ்வளவு தெளிவான சட்ட விதிகள் இருந்தும் ஆசிரியர் சங்கத்தினரின் தவறான விளக்கங்களை அளித்துள்ளனர். இத்தகைய தவறான விளக்கங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in